
காரைக்குடி: கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சங்கத்தில் இருந்து நூல் விநியோகிக்காததால், கைத்தறி நெசவுத்தொழில் முடங்கி உள்ளது. இதனால் நெசவாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் 650க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் கெட்டிச்சாயம் என்பதால் சாயம் போவது இல்லை. செட்டிநாடு காட்டன், புட்டா, கேஸ்மெசரீஸ் முதல் ரகம், ஜரிகை காட்டன், தொட்டிச்சேலைகள், காட்டன் சுடிதார் மெட்டீரியல் உட்பட பல்வேறு ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் சென்னை, மதுரை, கோவை, டில்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.நெசவாளர்களுக்கென அமரர் ராஜீவ்காந்தி கூட்டுறவுச்சங்கம், பழனிவேல்ராஜன், வள்ளல் எம்.ஜி.ஆர் கூட்டுறவுச்சங்கம் என 3 சங்கங்கள் இயங்கி வந்தன. சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு நூல் வழங்கி, அவர்கள் உற்பத்தி செய்து தரும் சேலைகளுக்கு கூலி வழங்கப்படும். இதில் பழனிவேல்ராஜன் மற்றும் வள்ளல் எம்ஜிஆர் சங்கங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன. கூட்டுறவு சங்கத்தேர்தல் அறிவிப்புக்கு பின் அமரர் ராஜீவ்காந்தி கூட்டுறவுச்சங்கத்துக்கு இதுவரை தேர்தல் நடத்தாமல், பரமக்குடி உதவி இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சங்கம் சரியாக செயல்படாமல் முடங்கி போய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. நூல் இல்லாததால் நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், ‘‘3 மாதங்களுக்கு மேலாக கூட்டுறவுச்சங்கம் முறையாக செயல்படவில்லை. இதனால் நூல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நூல் வழங்காததால் எங்களால் சேலை நெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையின்றி தவித்து வருகிறோம். ஒரு சிலர் கட்டிட வேலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. சங்கத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம்,’’ என்றனர்.இதுகுறித்து உதவி இயக்குநர் ஆனந்தகுமார் கூறுகையில், ‘‘வங்கியில் இருந்து வரவு, செலவு கணக்கு அனுமதி அளித்தவுடன் சங்கம் மீண்டும் செயல்படும்,’’ என்றார்.