
தேனி : தேனி பகுதியில் மருத்துவ குணம் கொண்ட ஊமத்தைக்காய்களை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக்காய்கள் ஒரு கிலோ ரூ50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கில மருத்துவம் இருந்தாலும், இன்னமும் சித்த மருத்துவத்திற்கான முக்கியத்துவமும் அதிகரித்தே வருகிறது. இதற்கான மூலிகை செடிகள் காடு, மலைகள் சென்றுதான் பறிக்க வேண்டும் என்பதில்லை. வீடுகளுக்கு அருகில் மானாவாரியாக முளைத்துள்ள செடிகளில் பல மருத்துவ குணமுள்ளவையாக உள்ளன. இதில் குப்பைமேனி, ஆமணக்கு, ஊமத்தை, கல்முறிஞ்சி போன்ற தாவரங்கள் வீடுகளைச் சுற்றி குப்பைப் பகுதியில் முளைத்திருக்கும். தற்போது தேனி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சாலையோரங்கள், காலி வீட்டுமனையிடங்களில் இவை அதிகளவில் முளைத்துள்ளன. இதில் சித்த மருத்துவத்திற்கு தேவையான ஊமத்தை காய் பறிக்க ஏராளமான பெண்கள் தேனியில் பல இடங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ஆண்டிபட்டியில் சித்தமருத்துவ தயாரிப்புக்காக ஊமத்தை, ஆமணக்கு, குப்பைமேனி, வேப்பங்கொட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர். நாங்கள் இந்த மூலிகை தாவரங்களை பறித்து சென்று விற்பனை செய்வோம். இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ300 வரை கிடைக்கும். தற்போது மழை பெய்துள்ளதால் விஷமுறிவுக்கான ஊமத்தை காய்கள் அதிகளவில் கிடைக்கிறது. இவற்றை காயவைத்து கிலோ ரூ50 வரை விற்கிறோம்’’ என்றனர்.